Thursday, 26 January 2017

வாசிப்பினை வசமாக்குவோம்!

ஒரு குளிர்காலத்தில்…
SALEENA, S. II MA English

பொதுவாகவே புத்தக திருவிழா என்றால் டிசம்பரில் மட்டுமே கிடைக்கும் எக்ஸ்ட்ரா ஐந்து நிமிட உறக்கம் போல் எங்கிருந்தோ ஒரு வெம்மை என்னை சுற்றிக் கொள்ளும். வருடம் முழக்க ஆங்காங்கே இருக்கும் புத்தகக் கடைகளில் சில்லரையாக புத்தகங்கள் வாங்கினாலும் புத்தக திருவிழாவின் போது மொத்தமாக அள்ளி அணைத்து வரும் புத்தகங்களின் மீதான பாசம் கொஞ்சம் அதீதமானது தான். காரணம், புத்தகக் கண்காட்சியில்  ஆதர்சமான ஓர் எழுத்தாளர் வந்திருந்தால் அவரிடம் உடனடியாக கையெழுத்து பெற முடியும். அவருடன் உரையாட முடியும். அதன் மூலமாக அந்தப் புத்தகங்கள்  ஏனைய புத்தகங்கலிலிருந்து தனித்துவம் பெறுவதையும் உணர முடியும்.

நாற்பதாம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சிக் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலிருந்தே என்னுள் ஒருவித பதற்றமும் எதிர்பார்ப்பும் குடிக்கொள்ள ஆரம்பித்தன. பதற்றம் உண்டாக காரணம், புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல தேவையான அளவு பணத்தைச் சேர்க்க வேண்டுமென்பது. எதிர்பார்ப்பு உண்டாக காரணம், புத்தகக் கண்காட்சியில் நிறைய்ய புத்தகங்களுடன் சுற்றி சுழலும் நிறைய்ய மனிதர்களையும் நண்பர்களையும் நிறைய்ய எழுத்தாளர்களையும் சந்திக்க முடியும் என்ற சூழல் குறித்த பேரானந்தம்.

புத்தக திருவிழா ஆரம்பித்து இரண்டு நாள் ஆகியும் தொடர்ந்து நிறைத்திருந்த வேலைகளின் காரணமாக செல்ல முடியவில்லை என்றாலும் அந்த மூன்றாவது நாளுக்கான ஆயத்தங்களை இரண்டாவது நாள் இரவே தொடங்கியாயிற்று.

இந்த வருட புத்தக திருவிழாவில் புத்தகங்கள் வாங்குவது தவிர்த்து பபாசி மற்றும் வாசக சாலை எனும் இலக்கிய அமைப்புகள் இணைந்து நடத்தும் தொடர் இலக்கிய நிகழ்வுகளுக்கான நிகழ்வினை 'தொகுத்து வழங்கும் பணி' எனக்கு அளிக்கப்பட்டிருந்தது.

காலை 11.30 மணியளவில் விழா துவங்கி விடும் என்பதால் தாம்பரத்தில் 10 மணிக்கு மின்சார ரயில் ஏறி அமர்ந்த பின் தான் எந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்ற ஒரு முழு முதலான ஒரு விஷயத்தையே பதற்றத்தில் மறந்திருந்ததனை உணர்ந்தேன்.

வழக்கமாக சென்னைப் புத்தகக் கண்காட்சி என்றாலே நந்தனம் ஒய்.எம்.சி. மைதானம் தான் சட்டென நினைவுக்கு வரும். ஏனெனில் அந்த இடத்தில்தான் சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடர்ச்சியாக நடைப்பெற்று வந்தன. சமீபத்திய இரண்டு ஆண்டுகளில்தான் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த வருடம் தீவுத்திடலிலும் இந்த வருடம் அமைந்தக்கரை தூய ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும் புத்தகக் காட்சி நடைப்பெற்றன.

க்ரோம் பேட்டை நெருங்கியதும் நண்பர்கள் இரண்டு பேருக்கு அழைக்க ஒருவர் நுங்கம்பாக்கத்திலிருந்து ஆட்டோவில் சென்றால் பக்கம் என்றும் இன்னொருவர் எழும்பூரில் இறங்கி பெரியார் திடலுக்கு அருகாக இருக்கும் எழும்பூர் பேருந்து நிலையத்துக்குச் சென்று 15பி பேருந்தைப் பிடித்து புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்துக்கு அங்கிருந்து பேருந்தில் ஐந்தே நிமிடம் தான் என சொல்ல இரண்டு குழப்பங்களுக்குமிடையே நுங்கம்பாக்கத்தில் இறங்கி ஓலா டேக்ஸியை புக் செய்தேன்.

நேரம் உசைன் போல்ட்டை விட விரைவாக ஓடிக் கொண்டிருந்ததை அப்போது தான் உணர்ந்தேன். டிரைவரிடம் அழைத்து கேட்டால் ,"எப்படியும் வர 10 நிமிடங்களாவது ஆகும் மா" என்றார். ஏற்கனவே பதினைந்து நிமிடங்கள் காத்திருந்த கடுப்பில் டேக்ஸியை கேன்சல் செய்து விட்டு அருகிலிருந்த ஆட்டோ அண்ணனிடம் புக் பேர் போகனும் ணா எவ்வளவு ரூபாய் என்று கேட்க அவர் தந்த பதிலில் எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. பார்த்தால் டேக்ஸிக்கு ஆகும் செலவினை விட 30 ரூபாய் குறைவாகவே சொன்னார்முதலில் டேக்ஸியில் போகலாமா என்ற யோசனையின் போதே மனம்,'டேக்ஸியில் எப்படியும் நூறு ரூபாயாவது ஆகும் அந்த நூறு ரூபாய்க்குள் ஒரு கவிதை தொகுப்பினையே வாங்கி விடலாம்' என்ற ஒரு குற்றப் பத்திரிக்கையினை தாக்கல் செய்திருந்தது. ஆனால் இப்போதெல்லாம் பணம் கொடுத்து நேரத்தை சேமிக்க தொடங்கி விட்டோம். அந்த காலத்தில் என் அப்பா பதினைந்து நிமிடங்கள் நடந்தே சென்று 50 பைசாவினை சேமித்தார். நான் ஐம்பது ரூபாயை செலவு செய்து பதினைந்து நிமிடங்களை சேமிக்க துவங்கி துவங்கி விட்டேன்ஒரு தலைமுறையின் இடைவெளி இப்படியும் தானே நகர்கிறது.

ஆட்டோ அண்ணன் 11.20 ற்கு ஜியார்ஜ் பள்ளிக்குள் இறக்கி விட்டார்.

பள்ளி வளாகத்துக்கு முன்பு புத்தகக் கண்காட்சிக் குறித்த நிறைய்ய பதாகைகளைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. நிறைய்ய பேர் பள்ளி வளாகத்தை நோக்கி செல்வதையும் பார்க்க முடிந்தது. நானும் வளாகத்தை நோக்கி நகர்ந்தேன்

உண்மையில் இந்த வருடப் புத்தகக் கண்காட்சி முன்னெப்போதும் இல்லாததைவிட மிகச் சிறப்பான முறையிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றே சொல்ல வேண்டும். தூய ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப் பள்ளியின் கட்டிடங்களும் அதன் சூழலும் புத்தகக் கண்காட்சி நடத்துவதற்குத் தகுந்த வகையில் விஸ்தாரம் மிக்கதாக இருந்தன. புத்தக அங்காடிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம், சிறப்பு அழைப்பாளர்கள் பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இடம், சிற்றுண்டி அங்காடிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்று எல்லாமும்  போக, வாகனங்களை நிறுத்துவதற்கும் தோதான வகையில் இருந்தது பள்ளியின் சூழல். அதுமட்டுமில்லாமல் மிதமிஞ்சிய வாகனங்கள் வரும்பட்சத்தில், (வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாதபட்சத்தில்,) பச்சையப்பன் கல்லூரியில் வாகனங்களை நிறுத்தவும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெருந்திரளாக கூடும் அந்தப் புத்தகக் கண்காட்சியில் வாசகர்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறைகளும் அமைக்கப்பட்டிருந்தன

அங்கிருந்த 680ற்கும் மேற்பட்ட கடைகளுக்குள் நானாகவே இலக்கிய நிகழ்வு நிகழும் இடத்தினை கண்டு பிடிப்பது மிக கடினம் என்றுணர்ந்து அருணிற்கு அழைத்தேன். அவர் "அரங்கு எண் 22 வாங்க செலீனா" என்று சொல்லி அழைப்பினைத் துண்டித்து விட்டார்.

அரங்கு எண் 22 நெருக்கிய போது அருண், கள்ளப் படம் படத்தின் இயக்குநர் வடிவேலு ,ராஜா மந்திரி படத்தின் இயக்குநர், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி மற்றும் வாசக சாலை நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அனைவரின் அறிமுகப்படுத்தும் படலத்திற்கு பின்னால் அரங்கினுள் நுழைய மூன்று பேர் மட்டும் தான் நிகழ்விற்கு வந்திருந்தார்கள். ஒரு இலக்கிய விழாவில் கூட்டங்களை நாம் எதிர்பார்க்கவும் முடியாது.

மூன்று பேரே அதிகபட்சம் என ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொண்டோம்.

சிறப்பு விருந்தினர்கள் எதனையும் எதிர்ப்பார்க்காமல் வந்திருந்தததால் மிகவும் யதார்த்தமாகத் தான் நிகழ்வு நடந்தது. தன்னை உருவாக்கியவர்கள் என்ற தலைப்பில் கவிஞர் மனுஷி, ஈழத்து எழுத்தாளர் அகர முதல்வன் மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்கள் உரையாடினார்கள்.

அகர முதல்வன் அவர்கள் ஜெயந்தனை பற்றிய மிக நீண்ட ஒரு அருமையான உரையை ஆற்றியப் பின்  நான் சற்றும் எதிர்ப்பார்க்காத ஒரு தருணத்தில் "செலீனாவின் தொகுத்து வழங்குதலை நான் ஒவ்வொரு முறையும் ரசித்துக் கொண்டிருக்கிறேன் எல்லாக் கூட்டதிலும் பைபிளிலிருந்து ஒரு வசனத்தினை சொல்லி விடுகிறார். மேலும் பைபிள் என்பது ஒரு மதம் சார்ந்த ஒரு நூல் மட்டுமல்ல அதில் புதைந்து கிடக்கும் கவித்துவங்கள் எண்ணாயிரம்" என்று சொல்லி என்னை சற்று ஊக்கப்படுத்தி அரங்கில் இருந்த அனைவரின் நெஞ்சிலும் அழகாக ஜெயந்தனை பதிவு செய்து உரையை முடித்து விட்டார்.நிகழ்வில் அவரது உரை தான் எனக்கு மிகப் பிடித்ததாயும் இருந்தது.

விழா முடிய மூன்று மணி ஆகியிருந்தது. மதிய உணவு அருந்திக் கொண்டிருக்கும் போது தான் நண்பர்கள் இருவர் அழைத்தார்கள். மூன்றரையிலிருந்து அவர்களுடன் இணைந்து புத்தகங்கள் தேடும் படலத்தில் கவிந்து விட்டோம்.

வெகு உற்சாகமாக ஒவ்வொரு கடைக்குள்ளும் நுழைந்து நுழைந்து வெளியேறிக் கொண்டிருந்த என்னை நண்பர் ஜெனிக் "அப்போ புக் ஏதும் வாங்குறதா இல்ல?" என ஒரு செல்லக் கோபத்துடன் கேட்க "அதான் பாத்துட்டு இருக்கேன்ல" என சொல்லி  ஒவ்வொரு புத்தகத்தையும் கண்களாலும் கைகளாலும் வருடிக் கொண்டே நகர்ந்து கொண்டிருந்தேன்.

உண்மையில் சொல்ல போனால் இன்ன புத்தகம் தான் வாங்க வேண்டும் என்ற எந்த பிரத்தியேக தயாரிப்புடனும் நான் செல்லவில்லை. அப்படி சென்றிருந்தாலும் அது நிச்சயம் நடந்திருக்காது என்று தெரியும்.

ஆதிப் பதிப்பகத்தில் தான் நான் வெகு நாளாய் வாங்க நினைத்திருந்த 'ரில்கேவின் கடிதங்களை' வாங்கினேன். பின் உயிர்மை,காலச்சுவடு, கிழக்கு, மீனாட்சி, விஜயா, ப்யூர் சினிமா, வம்சி... போன்ற பதிப்பகங்களில் நுழைந்தி கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நான் வாங்கிய புத்தகங்களின் செலவு ஐந்தாயிரத்தை தாண்டி விட்டது.

ஐந்தாயிரத்தில் இரண்டாயிரம் ரூபாயினை ஒரு நாள் 'என்' பேராசிரியர் ரூபஸ் அவர்கள் எனக்கு பரிசாக தந்தது.

அதிலிருந்து ஒரு  நூறு ரூபாயினை மட்டும் தனியாக எடுத்து வைத்திருக்கின்றேன்.

நாம் அனைவருக்குமே நமது அறைகளில் குட்டி மியூசியம் ஒன்று இருக்கும். அப்படி எனக்கும் ஒன்று உள்ளது. அந்த குட்டி மியூசத்தில் எனக்கான மிகச்சிறந்த நினைவுகளில் ஒன்றாக அந்த நூறு ரூபாயும் ரூபஸ் சரின் புன்னகையைப் போல் அமர்ந்துள்ளது.

புத்தகங்களும் நினைவுகளையும் தவிர மூன்றாவது நாளோ, வாரமோ, வருடமோ நம்மை உயிர்த்தெழ செய்பவை வேறு எதுவாக இருக்க முடியும்?!!


வாசிப்பினை வசமாக்குவோம்!

3 comments:

  1. அருமையான பதிவு.
    ஆம்! வாசிப்பினை வசமாக்குவோம்!

    ReplyDelete